Alaioli
ஜொகூர் மாநிலத்தில் டெங்கி சம்பவங்கள் 12.4 விழுக்காடு குறைவு

கே.கே.ஆர்.தேவி

ஜொகூர், ஏப்.15 – ஜோகூர் மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் பரவல் தற்போது கட்டுக்குள் இருப்பதாக இருந்தாலும், மக்கள் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.


2026ஆம் ஆண்டின் நோயியல் வாரம் 14 வரை ஜொகூரில் 1,495 டெங்கி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,706 சம்பவங்கள் இருந்ததை ஒப்பிடும்போது, இது 12.4 விழுக்காடு குறைவாகும் என்று அவர் கூறினார்.


ஆனால், வாரம் 14-இல் மட்டும் 146 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய வாரத்தை விட 9.8 விழுக்காடு அதிகரிப்பைக் காட்டுகிறது. இச்சம்பவங்களில் பெரும்பகுதி தொற்று மையங்களாக அறிவிக்கப்படாத பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன என்றார்.


மாவட்ட வாரியான பதிவுகளில் ஜோகூர் பாரு 103 சம்பவங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து கூலாய், குளுவாங், பத்து பகாட், கோத்தா திங்கி ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.


இதுவரை மொத்தம் 149 தொற்று பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 18.6 விழுக்காடு குறைவாகும். இந்த ஆண்டில் டெங்கி காரணமாக இரண்டு உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும், வாரம் 14 வரை புதிய உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


டெங்கி தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீடுகள், சுற்றுப்புறங்கள் ஆகிய இடங்களில் கொசு இனப்பெருக்கம் ஏற்படும் பகுதிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதனுடன், 2026ஆம் ஆண்டு இதுவரை 1,516 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மொத்த மதிப்பு 7 இலட்சத்து 58 ஆயிரம் ரிங்கிட் எனவும் கூறினார்.


மக்கள் வாரந்தோறும் குறைந்தது 10 நிமிடங்கள் ஒதுக்கி தண்ணீர் தேங்கும் இடங்களை சரிபார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும், பள்ளிகள், பொது இடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் லிங் தியான் சூன் வலியுறுத்தினார்.- Alaiolinews

Leave a Comment
Trending News