Alaioli
403 பிரச்சினைகள் முன்வைப்பு – தாங்காக் செயல் கூட்டம் மூலம் தீர்வில் வேகம், ஜொகூர் அரசு உறுதி

கே.கே.ஆர்.தேவி

ஜொகூர், ஏப்.23 – தாங்காக் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற செயல் கூட்டம், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக கையாளும் செயல் தளமாக செயல்பட்டது என ஜொகூர் மாநில வீடமைப்பு, ஊராட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் ஜஃப்னி முகமட் ஷுகோர் தெரிவித்தார். ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் காசி அவர்களின் பிரதிநிதியாக அவர் இக்கூட்டத்தை முன்னிலை வகித்தார்.


இந்த அமர்வில் தாங்காக், செரோம், காம்பிர், புகிட் கெப்போங் பகுதிகளில் இருந்து மொத்தம் 403 பிரச்சினைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அவற்றில் 67 பிரச்சினைகள் தீர்வு கண்டுள்ள நிலையில், 26 பிரச்சினைகள் 3.37 மில்லியன் ஒதுக்கீட்டில் செயல்பாட்டில் உள்ளன. 84 பிரச்சினைகள் ஆய்வில் உள்ளதாகவும், மேலும் 163 புதிய கோரிக்கைகள் 18.1 மில்லியனை கடந்த மதிப்பீட்டில் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் விளக்கினார்.


மேலும், 63 சிக்கலான பிரச்சினைகள் சுமார் 3.5 மில்லியன் செலவீனத்துடன் தொழில்நுட்ப மதிப்பீடு, கொள்கை ஒருங்கிணைப்பு, மேல்நிலை ஆய்வு ஆகியவற்றுக்காக தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்த செலவுத்தொகை 29.3 மில்லியனை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டது.


2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் தாங்காக் மாவட்டத்திற்கு 7.3 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு 56 திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் 33 திட்டங்கள் 4.83 மில்லியன் மதிப்பில் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளன. இக்கூட்டத்தின் போது 2.5 மில்லியன் செலவில் 25 முன்னுரிமை திட்டங்கள் ஒப்புதல் பெற்றன.


அடிப்படை வசதிகள் மேம்பாடு, பொதுமக்கள் பயன்பாட்டு அமைப்புகள் சீரமைப்பு, வழிபாட்டு தள பராமரிப்பு, சாலை பாதுகாப்பு ஆகியவை இத்திட்டங்களின் முக்கிய அம்சங்களாக உள்ளன.


அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த செயல்முறையில் இணைந்து செயல்படுகின்றன. எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மாநிலம் பெரும் முதலீடுகளை ஈர்த்துள்ள நிலையில் அதன் பலன்கள் நேரடியாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பது அரசின் நோக்கம் என டத்தோ ஜஃப்னி வலியுறுத்தினார்.


மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்வு காணப்படும் வரை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அபிவிருத்தியில் யாரும் பின்தங்காத சூழலை உருவாக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.- Alaiolinews

Leave a Comment
Trending News