Alaioli
கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகள் – டத்தோ சிவநேசனின் சேவையைப் பாராட்டினார் கம்போங் டெலிமா தலைவர்!!

பீடோர், ஏப்17- உதவிக் குரல் கேட்டவுடன் ஓடி வருவதோடு மட்டுமின்றி,கேட்டத் தருணத்தில் வீடு தேடி வரும் உதவிகளாலும் சுங்கை சட்டமன்றத் தொகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்திருப்பதோடு மட்டுமின்றி பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வு துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ.சிவநேசனின் சேவையையும் வெகுவாகப் பாராட்டுவதாகவும் கம்போங்  டெலிமா குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் திரு.கிருஸ்ணன் இங்குள்ள மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்.


சுங்கை சட்டமன்றத் தொகுதியைப் பொருத்தமட்டில் அதன் சட்டமன்றச் சேவை மையம் இங்குள்ள மக்களின் சிக்கல்களைக் களையவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நனிச் சிறப்பாக அதன் பங்களிப்பை செய்து வருவதாகவும் நினைக்கூர்ந்த கிருஸ்ணன் உதவினு நாடுவோருக்கு உடனடி தீர்வையும் டத்தோ அ.சிவநேசன் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தக் காலகட்டத்தில் கிருமி தொற்றினால் தனது இடது காலை இழந்த திரு.கி.சுந்தரம் அவர்களுக்கு சக்கரநாற்காலியை டத்தோ சிவநேசனின் சிறப்பு அதிகாரிகளும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களுமான திரு.தனலெட்சுமி மற்றும் திரு.ஜெயகுமார் ஆகியோர் வழங்கிய பின்னர் சுந்தரத்தின் தந்தையுமான கிருஸ்ணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


முன்னதாக அண்மையில் விபத்தொன்றில் பாதிகப்பட்டு நடப்பதற்கு பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கும் தாமான் அன்சனைச் சார்ந்த திருமதி.ப.தமிழ்ச் செல்விக்கும் சுங்கை சட்டமன்ற சேவை மையத்தின் வாயிலாக சக்கரநாற்காலி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


அவ்விருவரும் தங்களின் தேவைக்காக சக்கரநாற்காலி உதவியை டத்தோ சிவநேசனிடம்  கேட்ட ஓரிரு நாளில் அவர்களுக்கு அது வழங்கப்பட்டது.பேரா மாநிலச் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால் தனது சிறப்பு அதிகாரிகளின் வாயிலாக டத்தோ சிவநேசன் அந்தச் சக்கரநாற்காலிகளை வழங்கினார்.


கேட்டத் தருணத்தில் வீடு தேடி வந்த இவ்வுதவிகளுக்கு சுந்தரமும் தமிழ்ச் செல்வியும் தங்களின் நன்றிகளைப் பதிவு செய்து கொண்டனர். அதே வேளையில்,தங்களின் தேவைகளைக் கேட்டறிந்து உடனடியாக அதனைப் பூர்த்தியும் செய்திருப்பது மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக அவ்விருவரும் தெரிவித்தனர்.


மக்களுக்காக சேவை செய்யவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தனது சேவை மையத்தின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என்னும் டத்தோ சிவநேசனின் நம்பிக்கை வார்த்தைக்கு அவரது ஒவ்வொரு சேவையும் நடவடிக்கையும் சான்று எனவும் உதவி பெற்ற அவ்விருவரும் நன்றியோடு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.- Alaiolinews

Post Image

Leave a Comment
Trending News